Inherited karma from generations

வம்சா வழியாக தொடரும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வருடத்திற்கு ஒருமுறை இதை செய்தாலே போதும். ஊழ்வினை கர்மா குறையும்.

சில பேருடைய குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக கர்ம வினை தொடரும். நம்முடைய அப்பாவின் ஜாதகத்தில் கர்ம வினையின் காரணமாக சில பிரச்சனைகள் இருந்திருக்கும். அதேபோல மகனுடைய ஜாதகத்திலும் கர்ம வினையால் பிரச்சனைகள் தொடர்ந்து வரும். ஆக அடுத்தடுத்த தலைமுறைக்கு ஒரே மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உதாரணத்திற்கு, அப்பாவிற்கு தாத்தாவிற்கு இருந்து வந்த அதே கஷ்டம் மகனையும் தொற்றிக் கொள்ளும். அப்பா எந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டாரோ அதே விஷயத்தில் மகனும் பாதிக்கப்பட்டு இருப்பான். சொல்லப் போனால் அப்பா மகனின் ஜாதகம் கூட ஒன்று போல இருக்கும். இதைத்தான் ஊழ்வினை கர்மா என்று சொல்லுவார்கள். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தர்மம் செய்ய கருமம் குறையும் என்று சொல்லி வைத்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தர்மம் செய்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய கர்மவினை குறையுமே தவிர முழுமையாக நீங்காது என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம். குடும்பத்தில் தீராத கஷ்டம் இருந்தால் வம்சாவழி பிரச்சனைகள் இருந்தால் பின் சொல்லக்கூடிய விஷயங்களில் ஏதாவது ஒன்றை மனப்பூர்வமாக செய்தாலும் குடும்பத்திற்கு நன்மை நடக்கும்.

வம்சாவழி பிரச்சனைகள் தீர செய்ய வேண்டியவை

ஒரு வீட்டில் வம்சாவழியாக அடுத்தடுத்த தலைமுறைகள் கஷ்டப்பட்டு கொண்டே வருகிறது. நம்முடைய பிள்ளைகளும் அதே போல கஷ்டப்படக் கூடாது என்றால் உங்களுடைய பிள்ளையை நன்றாக படிக்க வைத்து அவர்களை ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு செய்ய வேண்டும். சாமியாராக மாற்ற வேண்டும் என்று சொல்ல வரவில்லை. இறை வழிபாட்டில் அக்கறை உள்ள குழந்தையாக கோவில்களுக்கு சேவை செய்யக்கூடிய விஷயங்களில் அக்கறை காட்டக் கூடிய பிள்ளையாக அவர்களை வளர்க்க வேண்டும்.  இன்றைய சூழ்நிலையில் பெரிய பெரிய கோவில்களிலேயே கூட நல்ல வேலை கிடைக்கிறது. அப்படிப்பட்ட வேலையில் அவர்களை சேர்த்து விட்டாலும் தவறு கிடையாது.  இப்படி தொடர்ச்சியாக கர்மவினையால் கஷ்டப்படும் குடும்பத்தில் இருக்கும் ஒருவர் இறைவனுக்கு சேவை செய்யும் விஷயத்தில் நெருக்கமாக மாறிவிட்டால் அந்த குடும்பத்தில் இருக்கும் ஊழ்வினை குறைக்கப் படும்.

அடுத்தபடியாக குலதெய்வ கோவிலுக்கு பெரிய அளவில் மணியை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். அந்த மணி கோவிலில் எவ்வளவுக்கு எவ்வளவு ஒலித்துக் கொண்டே இருக்கிறதோ அவ்வளவு தூரம் உங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அடுத்தவர்களுடைய பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கோவிலில் கட்டி வைத்திருக்கும் மணி அடிப்பார்கள். அப்போது அந்த மணியோசையில் உங்களுடைய பிரச்சனை தீரும்.

சில பேருக்கு நிறைய சொத்து இருக்கும். கணக்கில் அடங்காத சொத்துக்களை வைத்திருப்பார்கள். ஆனால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. வம்சவிருத்தி இருக்காது. திருமணம் நடக்காது. அப்படியே திருமணம் நடந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். இப்படி இல்லற வாழ்க்கையில் பிரச்சனை இருந்தால் உங்களுடைய சொத்தில் இருந்து ஒரு சிறு பங்கை குலதெய்வ கோவிலுக்கு தானமாக கொடுத்து விட வேண்டும்.

ரோட்டோர வியாபாரிகளுக்கு அல்லது வண்டி கடை வைத்து இருப்பவர்களுக்கு கஷ்டப்பட்டு தொழில் செய்பவர்களுக்கு உங்கள் கையால் தராசு வாங்கி தானம் கொடுக்கலாம். வெயிலில் காய்ந்து கொண்டு பழம் விற்கும் பாட்டி காய்கறி விற்கும் பாட்டி  இவர்களுக்கு பெரிய குடை வாங்கி தானம் கொடுக்கலாம்.  மேல் சொன்ன விஷயங்களை எல்லாம் கூடுமானவரை உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் செய்யலாம்.

இதைத் தவிர வருடத்திற்கு ஒருமுறை சமுத்திரத்தில் போய் நீராடி வரவேண்டும். வருடத்தில் ஒரு முறை மலைக் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை அருவியல் குளிக்க வேண்டும். முடிந்தால் ஒரே ஒரு முறை இராமேஸ்வரம் சென்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து திலா ஹோமம் செய்து கொள்ளுங்கள்.  மேல் சொன்ன எல்லாவற்றையும் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம்  இல்லை. உங்களால் எது முடிகிறதோ அதை மனப்பூர்வமாக செய்யுங்கள் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

No comments:

Post a Comment